
கிண்ணியாவிலிருந்து நீதிமன்றப் பதிவாளர் பதவியை முதன்முதல் வகித்தவர் எம்.எஸ்.எம்.நியாஸ் அவர்களாவர். இவர் அதிபர்களான முகம்மது சாலிஹ் - ஆமினா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1962.10.08 இல் கந்தளாயில் பிறந்தார்.
இவரது தந்தை கிண்ணியா பெரியாற்றுமுனையைச் சேர்ந்தவர் என்பதால் சிறுவயது முதலே கிண்ணியாவோடு நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை கந்தளாய் பேராற்றுவெளி மகா வித்தியாலயத்தில் கற்ற இவர் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையோடு மாத்தளை சாஹிராக் கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் அங்கு கற்ற இவர் பின்னர் திருகோணமலை இந்துக் கல்லூரியில் சேர்ந்து க.பொ.த (உ.த) வர்த்தக பிரிவு வரை அங்கு கற்றார்.
1984 இல் அமைய எழுதுவினைஞராக அரச சேவையுள் நுழைந்த இவர் 1996 இல் நீதிமன்றப் பதிவாளர் போட்டிப் பரீட்சை மூலம் தரம் III நீதிமன்றப் பதிவாளரானார். அந்தவகையில் கிண்ணியாவின் முதல் நீதிமன்றப் பதிவாளர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். அது மட்டுமல்லாது அக்காலத்தில் இளவயதில் நீதிமன்றப் பதிவாளர் பதவி கிடைத்த ஒருவராகவும் இவர் திகழ்ந்தார்.
2007 இல் நீதிமன்றப் பதிவாளர் தரம் II க்கு பதவியுயர்வுபெற்ற இவர் 2009 இல் தரம் I க்கு பதவியுயர்வு பெற்றார். மூதூர், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், பொலன்னறுவை ஆகிய நீதிமன்றங்களில் பதிவாளராக இவர் பணியாற்றியுள்ளார். நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல்நீதிமன்றம் ஆகியவற்றில் பதிவாளராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.
இவர் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் பதிவாளராகப் பணியாற்றிய காலத்தில் அந்த நீதிமன்றத்துக்கு தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் விருது கிடைத்துள்ளது.
சிங்கள மொழியில் மிகுந்த புலமையுள்ள இவர் சிங்கள – தமிழ் மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றார். சிறுவயது முதலே இலக்கிய ஆர்வம் கொண்ட இவர் நாடகம், வில்லுப்பாட்டு போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
கிண்ணியாப் பிரதே மக்களின் வாழ்வியல், பண்பாடு, மொழி தொடர்பான ஆய்வுகளை இவர் செய்துள்ளார்.
கிண்ணியாவில் திருமணம் செய்துள்ள இவர் 1980 முதல் கிண்ணியாவை தனது வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். ஊடகத் துறையோடும் மிக நெருங்கிய தொடர்புள்ள இவர் புத்தாயிரமாம் ஆண்டின் முதல் தமிழ் பத்திரிகையாக வெளிவந்த 'நேயம்' பத்திரிகை மற்றும் 'குரல்' பத்திரிகை ஆகியவற்றிலும் தனது முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடுடைய இவர் பல்வேறு ஆணைக்குழுக்களுக்கு திருகோணமலை மாவட்டம் சார்பாக அறிக்கை சமர்ப்பிப்பதில் பங்களிப்பை வழங்கியுள்ளதோடு அவற்றில் கலந்து கொண்டு வாய்மொழிச் சாட்சியங்களும் வழங்கியுள்ளார்.
தற்போது கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூராவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி சமுகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
எஹியா நஸ்ரின் இவரது வாழ்க்கைத்துணைவி. நுபைல் நிஸ்பான், பாத்திமா நிஸ்ஹா. பாத்திமா நிப்ரா, நுஸ்ரத் பானு, நுமைர், நுஹைர், நுராஸ் ஆகியோர் இவரது பிள்ளைகள்.
விரைவில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ள இவர் தொடர்ந்து சமுக, ஆய்வுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment