Thursday, 28, Sep, 1:20 PM

 

கிண்ணியாவில் இருந்து பல்கலைக்கழக முதல் நிறைவேற்றுத் தர அதிகாரியாக நியமனம் பெற்றவர் ஓ.அரூஸ் அவர்களாவர்.  இவர் மர்ஹூம் ஒழுமுதீன் - மரியம்பீவி தம்பதிகளின் புதல்வராக 1981.03.14 இல் சின்னக் கிண்ணியாவில் பிறந்தார்.
கிண்ணியா அல் அக்ஸாக் கல்லூரியில் கற்ற இவர் மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரிக்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்காக 2003 இல் தெரிவானார்.
2006 இல் ஆங்கில ஆசிரியராக அல் அக்ஸாக் கல்லூரியில் நியமனம் பெற்றார். 2013 வரை அங்கு ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலப் பகுதியில் இருமொழிப் பிரிவின் பகுதித் தலைவராக செயற்பட்டு மாணவர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கற்கை நிலைய உதவிப் பணிப்பாளர் பதவிக்காக கோரப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் 2013 இல் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக புத்தளம் பிராந்தியக் கற்கை நிலைய உதவிப் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.
2016 இல் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக திருகோணமலை பிராந்தியக் கற்கை நிலைய உதவிப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றார்.
இவர் திருகோணமலையில் கடமையைப் பொறுப்பேற்கும் போது 40 மாணவர்களுடன் ஒரேயொரு பாடநெறியுடன் அது இயங்கிக் கொண்டிருந்தது. இவரது 6 வருட சேவைக்காலத்தில் 15 பாடநெறிகள் இங்கு ஆரம்பிக்கப்பட்டு 500 க்கும் மேற்பட்ட மூவின மாணவர்கள் வருடா வருடம் பயனடைந்து வருகின்றனர்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழக திருகோணமலை பிராந்திய கற்கை நிலையத்திற்கு நிரந்தர கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக இவர் எடுத்த முயற்சியின் பலனாக 5 ஏக்கர் அரச காணி திருகோணமலை – கண்டி வீதியின் கப்பல்துறைப் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர் தனது கல்வித் தகைமைகளை கட்டங்கட்டமாக அதிகரித்திருக்கின்றார். PGDE (OUSL),  BA (Social Sciences) (2nd Upper Honours)(OUSL), HND English ( SLIATE) ஆகிய தகைமைகளை பெற்றுள்ள இவர் தற்போது MBA கற்றுக் கொண்டிருக்கின்றார்.
முன்னைநாள் கிண்ணியா கோட்டக் கல்வி அதிகாரி மர்ஹூம் கே.எம்.வஸீர் அவர்களின் முன்னெடுப்புக்களால் நீண்ட இடைவெளியின் பின்னர் 1991இல் தான் கிண்ணியாவில் 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்தனர். இவ்வாறு சித்தியடைந்த சொற்ப மாணவர்களுள் இவரும் ஒருவர்.
பாத்திமா நிரோஜின் ஹனி  இவரது வாழ்க்கைத்துணைவி. பாத்திமா ஸெஸால் பதி, முகம்மட் லுக்மான் ஸாஹ் ஆகியோர் இவரது பிள்ளைகள்.
இன்னும் பல ஆண்டுகள் அரச பணி செய்யும் வாய்ப்பிருப்பதால் இவரிடமிருந்து பல்வேறு பணிகளை எதிர்பார்க்கலாம்.  
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners