
கிண்ணியாவிலிருந்து முதல் பிரதிப் பிரதம செயலாளராக நியமனம் பெற்றவர் என்.தமிழ்ச்செல்வன் அவர்களாவர். இவர் அமரர் நடராஜா - சவுந்தரி தம்பதிகளின் புதல்வராக 1967.07.15 இல் ஈச்சந்தீவில் பிறந்தார்.
ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1991 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் விசேட பட்டத்தையும், 2000 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தேசியமட்ட அபிவிருத்தி திட்டமிடலில் பட்டப்பின் படிப்பில் விசேட சித்தியையும் பெற்றார்.
2001 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுகலைமானி பட்டம் பெற்ற இவர் 2019 இல் நெதர்லாந்து பல்கலைக்கழகத்தில் பொதுத்துறை நிர்வாக கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.
1992 இல் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பெரும்பாக உத்தியோகத்தராக நியமனம் பெற்று திருகோணமலையில் பணியாற்றினார்.
இலங்கைத்திட்டமிடல் சேவைக்காக 1994 இல் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர் நியமனம் பெற்றார். 1998 வரை கிண்ணியா பிரதேச செயலகத்திலும், 2004 வரை திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செலயகத்திலும் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றினார்.
2004 இல் வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின் (NECCDEP) திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதித் திட்டப் பணிப்பாளராக நியமனம் பெற்ற இவர் 2009 வரை அப்பதவியை வகித்தார்.
இலங்கைத் திட்டமிடல் சேவை முதலாந்தரம் பதவியுர்வு கிடைத்த பின் மூதூர் பிரதேச செயலகம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முதலமைச்சு, பிரதம செயலாளர் செயலகம் ஆகியவற்றில் திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றினார். இந்த வகையில் கிண்ணியாவிலிருந்து மாகாண அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் என்ற பதவியைப் பெற்ற முதலாமவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
இதனிடையே NELSIP திட்டத்தில் பகுதிநேர பிரதித் திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய இவர் தற்போது REDEP திட்டத்தின் பகுதி நேர மாகாணப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
2017 இல் இலங்கைத் திட்டமிடல் சேவை விசேட தரத்திற்கு பதவியுயர்வு பெற்ற இவர் தற்போது கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராகப் (திட்டமிடல்) பணியாற்றி வருகின்றார். இந்த வகையில் கிண்ணியாவிலிருந்து இப்பதவிக்கு தெரிவான முதலாமவர் என்ற பெருமையையும் இவர் பெறுகின்றார்.
ஏல்லோருடனும் சரளமாகப் பழகும் இவர் தனக்குக் கீழ் பணி புரிவோருடன் சிநேக பூர்வமாக பழகி பணியாற்றும் தன்மை வாய்ந்தவர்.
திருமதி ராதிகா இவரது வாழ்க்கைத்துணைவி. செல்வன் விதுஸன் இவரது புதல்வர்.
இன்னும் சில வருடங்கள் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றுள்ள இவர் பணிப்பாளர் நாயகம் பதவியுயர்வு பெறும் வாய்ப்பும் உள்ளது. இவரது பணி மேலும் சிறப்படைய வாழ்த்துவோம்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment