Wednesday, 29, Nov, 4:13 AM

 

தற்போது வைரஸ் தொற்றானது யாழ். மாவட்டத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் போல் வட மாகாணத்திலும் கொவிட் தாக்கம் அதிகரித்து உள்ளது. தற்போது பரவும் வைரஸ் தாக்கத்தினால் 20 தொடக்கம் 60 வயது வரையானோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டவர்களில் 10% ஆனோர் சுவாசிப்பதற்குச் சிரமப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுக்கு விசேட மருத்துவப் பராமரிப்பும், பிராணவாயு சிகிச்சையும் அத்தியாவசியமாகின்றது.

வைரஸ் நோயாளி ஒருவரில் இருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படலாம். எனவே, வைரஸ் தொற்றுத் தொடர்பாக அலட்சியப் போக்கினை கடைப்பிடித்தலாகாது. ஒருவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாது பாதுகாப்பதனால் அவர் தன்னையும் தான் சார்ந்த குடும்பத்தினையும் தனது சமூகத்தையும் நோய்ப் பரம்பலில் இருந்து பாதுகாக்கின்றார்.

வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பினைப் பெற தற்போதைய சூழலில் இரட்டை முகக்கவசம் அணிதல் நல்லது.

வைரஸ் தொற்றில் இருந்து 100% தனி நபரும் அவர் சார்ந்த சமூகம் விடுதலை அடைவதற்கான அணுகுமுறை

1. முகக்கவசம் அணிதல் - 10%
2. சமூக இடைவெளி பேணல் - 10%
3. கைகளை அடிக்கடி கழுவுதல் - 10%
4. பயணங்களைத் தவிர்தல் - 10%
5. சனத்திரள் மிக்க இடங்களைத் தவிர்த்தல் - 10%
6. ஒன்றுகூடலைத் தவிர்த்தல் - 10%
7. தூய்மி பாவித்தல் - 10%
8. போசாக்குள்ள உணவுகளை உண்ணல் - 10%
9. தடுப்பு மருந்து ஏற்றுதல் - 10%
10. குளிரூட்டப்பட்ட இடங்களைத் தவிர்த்தல் - 10%

மேற்கூறிய 10 முறைகளைக் கடைப்பிடித்தால் வைரஸ் தொற்று ஏற்படுவதனை 100% தவிர்க்கலாம். ஏனையவர்களுக்கும் தீநுண்மிப் பரவுதலை 100% தடுக்கலாம்.

மேலும் நோய் அறிகுறி உடையவர்கள் வீடுகளில் தனிமையில் அதாவது 12 நாட்கள் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டால் அதாவது தனிமைப்படுத்திக் கொண்டால் நோய் ஏனையவர்களுக்குத் தொற்றாது. அன்று பாரதத்தில் துரியோதனின் கொடுமையால் பாண்டவர்கள் 12 மாதங்கள் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டனர். ஆனால், தற்போதைய தீநுண்மிக்கு 12 நாட்கள் மட்டுமே அஞ்ஞாதவாசம் தேவை.

வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றபோது அவர்களை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு போதிய இடவசதிகள் இருக்காது. எனவே இந்த அபாயத்தினை உணர்ந்து இரண்டு கிழமைகள் சுய தனிமைப்படுத்தலை ஒவ்வொரு குடும்பமும் மேற்கொள்ளும் போது நோப்பரம்பல் குறையும். தேவையற்ற விதத்தில் நண்பர்களின் வீடுகள் உறவினர் வீடுகளுக்குச் செல்வதனைத் தற்போது தவிர்த்தல் நல்லது.

நோயாளர் தொகை அதிகரிக்கும்போது மருத்துவ ஆளணிப் பற்றாக்குறை ஏற்படும். இச் சந்தர்ப்பத்தில் சித்த மருத்துவத் துறையினரது உதவியினையும் முழுமையாகப் பயன்படுத்தல் வேண்டும். நோய் அறிகுறியற்ற தொற்றாளர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வசதிகள் அளிக்கப்படலாம். இதற்கு காசநோயக் கட்டடுப்பாட்டில் பயன்படுத்திய நேரடிக் கண்காணிப்பிலான சிகிச்சை முறையினைப் பயன்படுத்தலாம்.

வைரஸ் சுரம் இன்று உலகிற்கு பாரிய மிடியினை ஏற்படுத்தி உள்ளது. இவ்வைரஸ் மிடி உலக சமூக இயக்கத்தை 10 வருடங்கள் பின்னோக்கி நகர்த்தி உள்ளது. இது ஒரு நிசப்தமான உயிரியல் யுத்தமாகும். இத்தீநுண்மி ஆரம்பத்தில் பரவியவிதம் இயற்கைக்கு மாறாகவே உள்ளது. மேலும் இவ்வைரஸில் அடிக்கடி ஏற்படும் விகாரங்களும் பாதகமான திரிபுகளும் இயற்கையான நிகழ்தகவுக்கு அப்பால் வைக்கின்றது.

தற்போதைய சூழலில் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்புவதற்கு முற்காப்பு வழிகளே மிகச்சிறந்தவை ஆகும். இரண்டு கிழமைகள் அவதானமாக இருப்பதனால் நோயினைக் கட்டுப்படுத்தலாம். நோய்த்தடுப்பு மருந்துகளை அனைவரும் பெறுவது இரண்டு வருடங்களுக்குச் சாத்தியமாகாது. நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதும் சாத்தியமாகாது போகலாம். எனவே வருமுன் காத்தலை முன்னெடுத்தலே இன்று எம்முன் உள்ள தலையாய பணியாகும். இதனை ஒவ்வொரு மனிதனும் சிந்தையில் கொள்ள வேண்டும்.

வைரஸ் மிடியில் இருந்து மீட்சிபெற நாம் ஒவ்வொருவரும் திட சங்கற்பம் பூணுவோம்.

வைத்தியர். சி. யமுனாநந்தா

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners