
கிண்ணியாவிலிருந்து முதன் முதல் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT) நியமனம் பெற்றவர் மர்ஹூம் உமர் பாரூக் அவர்களாவர். இவர் மர்ஹூம்களான உமர் (அலிஅக்பர்) - றாஹிலா உம்மா தம்பதிகளின் புதல்வராக 1953.11.17 இல் பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.
முள்ளிப்பொத்தானை கொலனி குடியேற்றத் திட்டத்தில் இவரது தந்தைக்கும் காணி கிடைத்ததால் இவரது குடும்பம் அங்கு இடம்பெயர்ந்தது. இவர் தனது ஆரம்பக்கல்வியை முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் கற்றார்.
பின்னர் கிண்ணியா மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்.
1978 இல் உதவி மருத்துவர் (AMP) கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டார். சில மாத காலம் இக்கற்கை நெறியைத் தொடர்ந்தார். எனினும் இவரது குடும்பச் சூழ்நிலை காரணமாக பூரணமாகக் கற்க முடியவில்லை.
இந்நிலையில் 1979இல் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளரர் பயிற்சிக்குத் தெரிவாகி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளரானார். இந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, மகரகம புற்றுநோய் வைத்தியசாலை, திருகோணமலை பொது வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை ஆகியவற்றில் மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை சவூதிஅரேபிய ARAMCO நிறுவனத்திலும் சில வருட காலம் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றியுள்ளார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானிக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த இவர் கொழும்பு சட்டக்கல்லூரியிலும் கற்று 2003 இல் சட்டத்தரணியானார்.
மிகவும் அமைதியான போக்குடைய இவர் வயது வேறுபாடின்றி எல்லோருடனும் மிக அன்பாகப் பழகுவார். முரண்பாடுகளை விரும்பாத இவர் முரண்பட்டுள்ளோரை இணைத்து வைக்கும் வசதிப் படுத்துனராகவும் செயற்பட்டுள்ளார்.
2010.11.17 இல் அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற இவர் 2021.03.30இல் காலமானார். இவரது ஜனாஸா பெரிய கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியை ஜனூபா மஜீத் இவரது வாழ்க்கைத்துணைவி. பாத்தின் பாருக், பஸீஹா பாருக், பத்லி பாருக், பஹாமா பாருக் ஆகியோர் இவரது பிள்ளைகள்.
இவரது மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment